ஒரு முறை மன்னன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடப் போய் வழி தவறிவிட்டான். அப்போது அவனுடன் அவனது சமையற்காரனும் இருந்தான். இருவரும் வெகுநேரம் அலைந்து விட்டு ஒரு குடிசையைக் கண்டு அதற்குள் சென்றனர். அவர்களுக்கோ நல்ல பசி!

குடிசையிலிருந்த மூதாட்டி, அவர்களை வரவேற்று உட்காரச் சொன்னார். உடனே, அவர்களுக்குச் சாதம் வடித்து கீரையைச் சமைத்துப் போட்டார். அரசனும் அதைச் சாப்பிட்டுவிட்டு, “ஆகா! கீரை தான் எவ்வளவு நன்றாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது,” என்று கூறித் தன் கழுத்திலிருந்த இரத்தின மாலையைக் கழற்றி மூதாட்டிக்குப் பரிசாக அளித்தான்.

இதைப் பார்த்த சமையற்காரன், அரண்மனைக்குத் திரும்பியதும் சோற்றை வடித்து கீரையைச் சமைத்துப் பரிமாறினான். அதனை எடுத்து ஒரு வாய் போட்டதுமே அரசன் கோபங்கொண்டு, உடனே சமையற்காரனை வேலையைவிட்டு நீக்கி விட்டான். பசி ருசி அறியாது என்பதை சமையற்காரன் அறிந்திருக்கவில்லை.

கேள்விகள் :

1. மன்னனும் சமையற்காரனும் குடிசைக்குள் செல்லக் காரணம் என்ன?

2. சமையற்காரன் அரசனுக்குக் கீரையைச் சமைத்துப் போடக் காரணம் என்ன?

ஒலி வடிவம்:

தெனாலிராமன்

தெனாலிராமன் எப்போதும் நகைச்சுவையாகப் பேசி எல்லாரையும் மகிழ வைப்பார். ஒரு சமயம் தெனாலிராமன் அக்பரின் கோபத்துக்கு ஆளானார். உடனே அக்பர், “ராமா! உன் செய்கைகள் எல்லை மீறுகின்றன. இனி உன் முகத்தில் நான் விழிக்க விரும்பவில்லை!” என்று சினத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.

மறுநாள் அக்பர் அரசவையில் ஒரு முக்கியமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தார். திடீரென்று அவையினர் முணுமுணுத்தனர். அக்பர், “என்ன நடக்கிறது?” என்று வினவினார். அப்போது தெனாலிராமன் அவரது முகத்தில் ஒரு மண்பானையைக் கவிழ்த்தபடி வந்து தம் இருக்கையில் அமர்வதை அக்பர் கண்டார். “ராமா! என் பேச்சை மீறிக்கொண்டு இங்கு வந்திருக்கிறாயா?” என்று கேட்டார். அதற்குத் தெனாலிராமன், “அக்பரே! நீங்கள் என் முகத்தைக் காண விரும்பவில்லை என்றுதானே சொன்னீர்கள். அதனால்தான் என் முகத்தை மறைக்கப் பானையைக் கவிழ்த்துக்கொண்டேன்!” என்று சொன்னார். அதைக் கேட்டு அக்பர் சிரித்து விட்டார்.

கேள்விகள் :

1. அக்பர் ஏன் தெனாலிராமன் மீது கோபங்கொண்டார்?

2. தெனாலிராமன் ஏன் தமது முகத்தில் மண்பானையைக் கவிழ்த்தபடி அரசவைக்கு வந்தார்?

ஒலி வடிவம்: